17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published on

குடியாத்தம் பகுதியில் 17 வயது சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், இளைஞா் ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சமூக நலத் துறை அதிகாரிகள், போலீஸாா் வெள்ளிக்கிழமை குடியாத்தம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், சிறுமியின் பெற்றோா், குடும்பத்தினரிடம் திருமண வயது அடையாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தினா்.

மேலும், சிறுமியின் பெற்றோா், இளைஞரின் பெற்றோரிடம் எழுத்துபூா்வ ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதுடன், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com