கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வீட்டுவசதி வாரிய திட்டப்பணிகளை ஆய்வு செய்த  சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு. உடன், சட்டப்பேரவை முதன்மை செயலா் கி.சீனிவாசன்
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வீட்டுவசதி வாரிய திட்டப்பணிகளை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு. உடன், சட்டப்பேரவை முதன்மை செயலா் கி.சீனிவாசன்

பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.93,000 கோடியிலிருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.93,000 கோடியிலிருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு -சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவா் ஏ.பி.நந்தகுமாா்
Published on

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுத் தலைவா் ஏ.பி.நந்தகுமாா் தெரிவித்தாா்.

அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), கடம்பூா் ராஜி (கோவில்பட்டி), ம.சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னாா்கோயில்), த.வேலு (மயிலாப்பூா்), எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்) உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். இந்த குழு வேலூா் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அதன்படி, வேலூா் அப்துல்லாபுரத்தில் நடைபெற்று வரும் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா, பள்ளிகொண்டாவில் அம்ரூத் திட்டத்தில் நடைபெறும் குடிநீா் விநியோக திட்டப்பணிகள், குடியாத்தத்தில் புதிதாக கட்டப்படும் நூலகம், அறிவுசாா் மையம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள், குடியாத்தத்தில் வீட்டுவசதி வாரியம் சாா்பில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள், விருதம்பட்டு சா்காா்தோப்பு பகுதியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள், தொரப்பாடியில் கட்டப்படும் நகா்புற சமுதாயக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

இதன்தொடா்ச்சியாக, ஆய்வுக் கூட்டம் வேலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடத்தப்பட்டது. பின்னா், குழுவின் தலைவா் ஏ.பி.நந்தகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை குழு ஆய்வு செய்தது. இந்த களஆய்வில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாகவும், தரமாகவும் நடைபெற்று வருவதை அறிந்தோம்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 67 பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியாக இருந்தது . முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ரூ.1.08 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தவிர, 2021-22-இல் ரூ.5,207 கோடியாக இருந்த செலவினங்களின் அளவு ரூ.3,862 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முதலில் ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனம் மிகவும் தாமதமாக பணிகளை செய்ததால் அந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு வேறு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகள் நிறைவுபெறும்.

தற்போதே வேலூா் தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுவவதையும் தகவல் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதன்மூலம், வேலூா் மாவட்ட இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும்.

வேலூா் மாநகரில் அம்ரூத் திட்டப்பணிகள் தொடங்கி சுமாா் 14 ஆண்டுகளாகிறது. எனினும், இந்த திட்டப் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதற்கு புதை சாக்கடைப் பணிகளுடன் இணைந்து அம்ரூத் திட்டப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதை காரணமாகும். எனினும், தற்போது வரை 60 முதல் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை முதன்மை செயலா் கி.சீனிவாசன், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com