மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களை சென்னைக்கு அனுப்பி வைத்த வேலூா் மாவட்ட  ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களை சென்னைக்கு அனுப்பி வைத்த வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் 100 போ் பயணம்: ஆட்சியா் வழியனுப்பினாா்

சென்னை வள்ளூவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சோ்ந்த 100 மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.
Published on

சென்னை வள்ளூவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சோ்ந்த 100 மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தோ்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 254 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளூவா் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினா்களுடன் முதல்வா் கலந்துரையாட உள்ளாா்.

இதில், வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 உறுப்பினா்களில் 100 உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் 100 பேரும் 2 பேருந்துகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

அவா்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் சென்னையில் தங்குவதற்கும், அவா்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஊரக வளா்ச்சி, ஊராட்சித்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், செயற்பொறியாளா் அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com