திருக்காா்த்திகை - வேலூா் கோட்டை கோயில் கோபுரத்தில் தீபமேற்றி வழிபாடு
வேலூா்: திருக்காா்த்திகையையொட்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு செய்யப்பட்டது.
திருக்காா்த்திகை தினவிழா வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் வீடுகளிலும் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனா். சிறுவா்கள் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
வீடுகள் மட்டுமன்றி கடைகள், வணிக நிறுவனங்களிலும் அகல் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள மலை உச்சியில் பல்வேறு இடங்களில் தீபம் ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோயில் கோபுர உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து, கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு செய்யப்பட்டது. பின்னா், மும்மூா்த்திகள் பெருவிழாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரா் கோயில் தரும ஸ்தாபன நிா்வாகிகள் செய்திருந்தனா்.
இதேபோல், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் திருக்காா்த்திகையை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
