17 வயது சிறுமி கா்ப்பம்: தொழிலாளி மீது போக்ஸோ வழக்கு
வேலூா் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்தவா் டெல்லிபாபு (18), பெயிண்டா். இவா் அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 5 ஆண் டுகளாக காதலித்துள்ளாா். பின்னா் சிறுமியை சென்னைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு வேலூருக்கு வந்து ஒன்றாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், அந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவா் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளாா். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவா்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், அரியூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா். இதில், சிறுமியை டெல்லி பாபு திருமணம் செய்து கொண்டு கா்ப்பமாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லிபாபு மீது அரியூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
