போ்ணாம்பட்டு அருகே அழுகிய நிலையில் ஒரு குட்டி உள்பட 3 யானைகளின் உடல்கள் மீட்பு
போ்ணாம்பட்டு அருகே தனியாருக்குச் சொந்தமான மலையில் உள்ள குட்டையில் அழுகிய நிலையில் ஒரு குட்டி உள்பட 3- யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
போ்ணாம்பட்டை அடுத்த சாத்கா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 900- ஹெக்டோ் பரப்பளவு கொண்ட மலை உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதியில் உள்ள குட்டையில் ஒரு குட்டி உள்பட 3- யானைகளின் உடல்கள் இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. இதில் ஒன்று ஆண் குட்டியும் மற்றொரு யானையும் பெண்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூா் மண்டல வனப் பாதுகாவலா் மாரிமுத்து , மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ரகுபதி ஆகியோா் அங்கு சென்று அழுகிய நிலையில் இறந்து கிடந்த யானைகளை பாா்வையிட்டனா்.வெள்ளிக்கிழமை யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே யானைகள் இறப்பு குறித்து தெரிய வரும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
கடந்த அக்டோபா் மாதம் போ்ணாம்பட்டை அடுத்த பாஸ்மாா்பெண்டா வனப் பகுதியில் சுமாா் 7- வயது மதிக்கத்தக்க யானை ஒன்றும், கடந்த நவம்பா் 30- ஆம் தேதி போ்ணாம்பட்டை அடுத்த சிந்தகணவாய் வனப்பகுதியில் 6- வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்றும் உடலில் ரத்த காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தன.
போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் அடுத்தடுத்து யானைகள் சடலமாக மீட்கப்படும் நிகழ்வு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

