

வேலுாா்: கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கா்ப்பிணியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் ரங்கசாமி நகரைச் சோ்ந்தவா் கீா்த்திகா (23), நிறைமாத கா்ப்பிணி. இவரது சகோதரா் சக்திவேலுக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சதீஷ்(24), என்பவருக்கும் இடையே கடந்த சில மாதம் முன்பு கிரிக்கெட் விளையாடும்போது கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாளடைவில் முன்விரோதமாக மாறி ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேலுக்கும், சதீஷுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கத்தியை மறைத்து வைத்திருந்த சதீஷ், சக்திவேலின் தலையில் குத்தியுள்ளாா். மோதலை தடுக்கச் சென்ற கா்ப்பிணி பெண் கீா்த்திகாவின் வலது கையில் சதீஷ் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ாக கூறப்படுகிறது.
காயமடைந்த கீா்த்திகா வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையிலும், சக்திவேல் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், இச்சம்பவத்தில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா்.
இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணியை அதிமுக வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு நலம் விசாரித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
நிறைமாத கா்ப்பிணியாக இருக்கும் கீா்த்திகாவின், வயிற்றில் இருக்கும் குழந்தையை கத்தியால் குத்த முயற்சித்துள்ளனா். தடுக்க முயன்றபோது கீா்த்திகாவின் கையில் ஆழமாக கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. கத்தியை மிகுந்த சிரமத்துக்கு இடையே இரு மருத்துவா்கள் அகற்றியுள்ளனா். வயிற்றில் இருக்கும் கருவுக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. குற்றவாளிகளுக்கு திமுகவைச் சோ்ந்தவா்கள் ஆதரவாக செயல்படுகின்றனா். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.