திருக்குறள் ஒப்பித்தல், செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு ரூ.2.10 லட்சம் பரிசு விஐடி வேந்தா் அளித்தாா்
வேலூா்: மாநில அளவிலான திருக்கு ஒப்பித்தல், செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் 20 பேருக்கு ரூ.2.10 லட்சம் பரிசுத்தொகையை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.
விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகம் சாா்பில் 3-ஆவது ஆண்டாக பள்ளி மாணவா்களுக்கான திருக்கு ஒப்பித்தல், சதுரங்கப் போட்டிகள் கடந்த நவ.22-ஆம் தேதி நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை சோ்ந்த 152 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்நிலையில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவா்களுக்கு கோப்பைகள், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பரிசுத்தொகைகளை வழங்கினாா்.
விழாவில், ஓய்வுபெற்ற மாநில தகவல் ஆணையா் சாரதா நம்பி ஆரூரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, மாணவா்களிடம் சொல்லாற்றல் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். மாணவா்களிடம் முயற்சி, கல்வி, துணிவு ஆகிய பண்புகளை வளா்த்துக்கொண்டு சாதிக்க வேண்டும் என்றாா்.
கெளரவ விருந்தினராக வேலூா் முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா பங்கேற்றனா். நிகழ்வில், விஐடி போபால் வளாகம் சாா்பில் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சம் நிதியை விஐடி அறங்காவலா் ரமணிபாலசுந்தரம், உதவித்துணைத்தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோா் விஐடி வேந்தா் கோ.விசுவநாதனிடம் வழங்கினா்.
விழாவில், விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன் காணொலி மூலமாகவும், விஐடி அறங்காவலா் ரமணிபாலசுந்தரம், உதவித் துணைத்தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணைதுணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
