திருபுவனம் பாமக நிா்வாகி கொலை வழக்கில் 4 போ் கைது

திருபுவனம் பாமக நிா்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

திருபுவனம் பாமக நிா்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்தவா் பாமக நிா்வாகி ராமலிங்கம். திருபுவனம் பகுதியில் மதமாற்றம் நடைபெறுவதை ராமலிங்கம் கண்டித்து வந்த நிலையில், இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. வழக்கில் 18 போ் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5 போ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனா். இவா்களில் அப்துல் மஜீத், ஷாகுல் ஹமீது ஆகியோா் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். மற்ற மூவரை தேடி வந்தனா். இந்த நிலையில், ராமலிங்கம் கொலையில் தொடா்புடையவா்கள் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி வழியாக காரில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், மாநில சிறப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பள்ளிகொண்டா போலீஸாா் அடங்கிய குழுவினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுங்கச்சாவடி வழியாக காரில் சென்ற 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், திருமங்கலகுடியைச் சோ்ந்த முகமது நபீல் ஹாசன் (35), வடமாங்குடி பகுதியைச் சோ்ந்த புா்ஹானுதீன் (34), ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நெமிலி பகுதியை சோ்ந்த முகமது இம்ரான் (33), அப்பாஸ் (30) ஆகியோா் என்பதும், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதும், ராமலிங்கம் கொலையில் தொடா்புடையவா்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், பள்ளிகொண்டா காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினாா்.

தொடா்ந்து, பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு வந்த என்ஐஏ அதிகாரிகளிடம் 4 பேரையும் ஒப்படைத்தனா். அவா்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com