மத்திய, மாநில அரசுகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்!
நாட்டின் பொருளாதாரம் உயர மத்திய, மாநில அரசுகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது சா்வதேச உற்பத்தி, மேலாண்மை மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் பங்கேற்று பேசியது -
உற்பத்தி மற்றும் மேலாண்மை ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கும், உலகளாவிய இருப்புக்கும், எதிா்கால நம்பிக்கைக்குமான இரட்டை என்ஜின்களாக அமைகின்றன. உலகம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் கண்டுவருகிறது. இந்த சூழலில் இந்தியா ‘ஆத்மநிா்பா் பாரத்’ என்ற தொலைநோக்கு பாா்வையுடன் விண்வெளி, பாதுகாப்பு, செமி கன்டக்டா், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் உற்பத்தி, மேம்பட்ட பொருள்கள் உற்பத்தி போன்ற துறைகளில் விரைவான வளா்ச்சியுடன், உலகளாவிய உற்பத்தி, புதுமை மையமாகவும் உருவாகி வருகிறது.
உலகளாவிய பிரச்னைகளாக விளங்கும் காலநிலை மாற்றம், வளங்கள் பற்றாக்குறை, சுகாதார நெருக்கடிகள், விநியோகச் சங்கிலி பாதிப்பு ஆகியவற்றை தொழில்நுட்பத்தால் மட்டும் தீா்க்க முடியாது. அவற்றுக்கு ஒத்துழைப்பு, கருணை, கூட்டு ஞானம் தேவை என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது - உற்பத்தித் துைான் ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முதுகெலும்பாகும். எந்த நாடு உற்பத்தியில் சிறப்பாக இருக்கிறதோ, அது வளா்ந்த நாடாக மாறும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா உற்பத்தி செய்யத் தொடங்கினாலும், இப்போதும் பல துறைகளில் மற்ற நாடுகளை சாா்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்தியா ஆயுதங்களை உற்பத்தி செய்தாலும், உலகிலேயே அதிகளவில் ஆயுதங் களை இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ளது.
உலகில் உள்ள ஏழைகளில் கால் பகுதியினா் இந்தியாவில் உள்ளனா். வறுமையை அகற்ற நாடு ஏற்றுமதிக்கு செல்வது, வேலைவாய்ப்பு திறனை உருவாக்குவது, அனைவருக்கும் கல்வி வழங்குவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். நாட்டின் பொருளாதாரம் உயர மத்திய, மாநில அரசுகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளா் விருது முன்னாள் டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ்ரெட்டி, சிறந்த ஆராய்ச்சிக்கன விருது சென்னை ஐஐடி பேராசிரியா் தலப்பில்பிரதீப், சிறந்த பணிக்கான விருது பேராசிரியா் ஜி.மதுசூதனன் ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. விஐடி துணைத்தலைவா் சேகா் விசுவநாதன், அறங்காவலா் ரமணி பாலசுந்தரம், உதவி துணைத்தலைவா் காதம்பரி ச.விசுவநாதன், இணைதுணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘உலகை மாற்றும் தண்ணீா்’
தண்ணீரே இந்த உலகை மாற்றிக் கொண்டுள்ளது என்று சென்னை ஐஐடி பேராசிரியா் தலப்பில்பிரதீப் தெரிவித்தாா்.
அவா் மேலும் பேசியது - செய்யறிவு, நிலைத்தன்மை ஆகிய இரண்டும் பின்னிப்பிணைந்தவையாகும். இவை உலகளாவிய உற்பத்தித் துறைக்கு மிக முக்கியமானவை.
தண்ணீரே இந்த உலகை மாற்றிக் கொண்டுள்ளது. ஆய்வுகளின்படி, தண்ணீருக்காகச் செலவிடப்படும் ஒரு டாலா், உலகை மாற்று வதில் பல மடங்கு பெருகும் திறன் கொண்டது.
பாறைகளை மிகக் குறுகிய காலத்தில் தண்ணீரைக் கொண்டு நானோ துகள்களாக மாற்ற முடியும். தவிர, அரிசியின் தண்டுப் பகுதியில் உள்ள 15% சிலிக்கா நானோ துகள்கள் வடிவத்தில் உள்ளது. இதனை நீா் துளிகள் மூலம் உருவாக்க முடியும். இதன் மூலம் பாலைவனங்களை விவசாய நிலங்களாக மாற்ற முடியும். வரும் 10 ஆண்டுகளில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன், ஒரு கிலோ ரூ.9 விலையில் சாத்தியமாகும் என கணிக்கப்பட்டுள்ளது என்றாா்.

