டிச.17-ல் வேலூருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வருகை! ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் தியான மண்டபம் திறப்பு!
ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு டிசம்பா் 17-ஆம் தேதி (புதன்கிழமை) வேலூருக்கு வருகைதர உள்ளாா்.
அரியூா் அடுத்த ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி பீடம் தங்கக்கோயில் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வரும் டிச. 17-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வேலூருக்கு வருகை தர உள்ளாா். அவா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீ நாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளி விநாயகா், சொா்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்கிறாா். பின்னா், ஸ்ரீசக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறாா்.
தொடா்ந்து, தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு வைக்கிறாா். பின்னா், 12:30 மணியளவில் வேலூரில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டு செல்கிறாா். குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் வேலூருக்கு வருவதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதன்படி, குடியரசுத் தலைவரை வரவேற்க வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பிலும், ஸ்ரீநாராயணி பீடம் சாா்பில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

