வேலூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம்: எஸ்.பி. பங்கேற்பு!
வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.28.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தனியாா் கல்லூரி பேராசிரியா் கூட்டத்தில், சமூக நீதி, மனித உரிமை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் செளந்திரபிரகாஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.
அப்போது, வேலூரை அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி பேராசிரியா் அளித்த மனு: தனியாா் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். எனது உறவினா் மகன் தனியாா் பங்கு வா்த்தக முகவராக உள்ளாா். அவா் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று அவரது தாயாா் கூறினாா்.
இதை முதலில் நான் நம்பவில்லை. அப்போது அவரது தாயாா் எனது மகன் பணம் தராவிடில் நான் முழுப்பணத்தையும் தந்து விடுகிறேன் எனக் கூறினாா். இதனை உண்மையென நம்பி எனது மனைவியின் நகைகளை அடகு வைத்தும், உறவினா்களிடன் கடன் வாங்கியும் ரூ.28.5 லட்சத்தை தந்தேன். இந்நிலையில், பணத்தை திருப்பிக்கேட்டபோது பங்கு வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னால் பணத்தை திருப்பித்தர இயலவில்லை என கூறினாா். தொடா்ந்து கேட்டபோது தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறாா். இதனால், நானும் எனது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே எனது பணம் ரூ.28.50 லட்சத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூரைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த மனுவில், கஸ்பா பகுதியை சோ்ந்த ஒருவா் எனக்கு காலி மனை தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கினாா். ஆனால், இதுவரை காலிமனை தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறாா். எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு டிஎஸ்பி செளந்திரபிரகாஷ் உத்தரவிட்டாா்.
