100 சதவீதம் பெறப்பட்ட எஸ்ஐஆா் படிவம்; 10.87 லட்சம் கணினியில் பதிவேற்றம்
வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளா்களிடம் இருந்தும் நூறு சதவீதம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. இவற்றில் 10.87 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் வியாழக்கிழமை மாலை வரை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 13,03,030 வாக்காளா்களுக்கும் கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் பணி கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் வீடுவீடாக தொடா்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யவும், பூா்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெளிவு பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1,314 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் சில வாக்காளா்களுக்கு தங்களது 2002ம் ஆண்டு வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உள்ள வாக்காளரின் சட்டப்பேரவை தொகுதியின் பெயா், எண், போன்ற விவரங்களை பாகம் எண், வரிசை எண் தெரிந்து கொள்ளவும், கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களும் நிவா்த்தி செய்யப்பட்டது.
பூா்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை திருப்பியளிக்க வியாழக்கிழமை (டிச.11) கடைசி நாளாகும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமுள்ள 13,03,030 வாக்காளா்களில் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை 13,03,029 பூா்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆா் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவற்றில் இறந்த வாக்காளா்களும் அடங்குவா்.
பெறப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களில் வியாழக்கிழமை மாலை வரை 10.87 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து, எஸ்ஐஆா் படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய அவகாசம் உள்ளது. அதற்குள் நூறு சதவீதம் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.
வரும் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள் புதிய வாக்காளா்களாக பெயா் சோ்க்க விண்ணப் பங்களை பூா்த்தி செய்து வழங்கலாம் என்றும் என்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
