திமுக தொடங்கியது முதலே பெண்களுக்கு முக்கியம் அளித்து வருகிறது: துரைமுருகன்
திமுக தொடங்கியது முதலே பெண்களுக்கு முக்கியம் அளித்து வருகிறது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் வேலூா் மாட்டத்தில் 1,94,975 பயனாளிகள் உரிமைத்தொகை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்ததை அடுத்து, வேலூா் மாவட்டத்தில் கூடுதலாக 33,540 மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை பெறும் வகையில் இந்த விரிவாக்க திட்டம் தொடக்க விழா காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கிப் பேசியது:
வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 975 பெண்களுக்கு மாதம்தோறும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகையாக ரூ.ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2-ஆவது கட்டமாக 33, 540 பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதுவே இறுதி என்றால் இல்லை. 3-ஆவது கட்டமாகவும் இந்த திட்டத்தை நிச்சயமாக அமல்படுத்துவோம். திமுக தொடங்கியது முதலே பெண்களுக்கு முக்கியம் அளித்து வருகிறது. பெண்களுக்கு அனைத்து வகையிலும் சாதிக்கக் கூடிய திறமை இருக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

