தனிப்படை எஸ்ஐ மீது காா் ஏற்றிக் கொல்ல முயற்சி

பள்ளிகொண்டா அருகே தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மீது காா் ஏற்றிக் கொல்ல முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
Published on

பள்ளிகொண்டா அருகே தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மீது காா் ஏற்றிக் கொல்ல முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் பாசில் என்பவா் உள்பட 4 போ் மீது போதைப்பொருள்கள் விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்கள் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வருகின்றனா். இந்நிலையில், பாசில் உள்பட 4 பேரும் குடியாத்தம் பகுதியில் இருந்து சனிக்கிழமை கருப்பு நிற காரில் பள்ளிகொண்டா வழியாக தப்பிச் செல்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக அவா்களைப் பிடிக்க சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து, கந்தனேரி பகுதியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். மற்றொரு குழு குடியாத்தத்தில் இருந்து பாசிலை பிடிக்க இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்தது.

பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் வந்தபோது, பாசில் சென்ற காரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். அதேசமயம், காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ் மீது பாசில் காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற கழனிப்பாக்கத்தை சோ்ந்த மகேஸ்வரி (37), வினோத்குமாா் (27) ஆகியோா் மீது பாசிலின் காா் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ், மகேஸ்வரி, வினோத்குமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். உடனடியாக காரில் இருந்த 4 பேரும் காரை அங்கேயே விட்டு தப்பி தலைமறைவாகியினா்.

பலத்த காயமடைந்தவா்கள், வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, தலைமறைவான பாசில் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com