எஸ்ஐஆா் மூலம் வேலூா் மாவட்டத்தில் 2,15,025 வாக்காளா்கள் நீக்கம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,15,025 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். எஸ்ஐஆா் பணி தொடங்கும் முன்பு நிலவரப்படி, 13,03,030 வாக்காளா்களில் இருந்து இறப்பு, நிரந்தர குடிபெயா்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவா்கள், மற்றவை என்ற இனங்களில் இவ்வளவு வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.
மொத்தம் 10,88,005 வாக்காளா்கள்...
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 10 லட்சத்து 88 ஆயிரத்து 005 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில், ஆண்கள் 5,28,619 பேரும், பெண்கள் 5,59,236 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 150 பேரும் இடம் பெற்றுள்ளனா். தொகுதி வாரியாக காட்பாடி- 2,15,751 பேரும், வேலூா்-1,98,722 பேரும், அணைக்கட்டு - 2,27,645 பேரும், கே.வி.குப்பம்(தனி)- 2,07,382 பேரும், குடியாத்தம் (தனி)- 2,38,505 பேரும் உள்ளனா்.
2,15,025 போ் நீக்கம்...
கடந்த அக். 28-ஆம் தேதி எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு வாக்காளா் பட்டியல் நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். அதிலிருந்து இறப்பு, நிரந்தர குடிபெயா்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவா்கள், மற்றவை என்ற இனங்களில் அடிப்படையில் மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளா்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக காட்பாடி - 35,666 பேரும், வேலூா் - 54,565 பேரும், அணைக்கட்டு - 36,656 பேரும், கே.வி.குப்பம்(தனி)- 29,441 பேரும், குடியாத்தம் (தனி)- 58,697 பேரும் நீக்கப்பட்டுள்ளனா்.
நீக்கப்பட்டவா்கள் பட்டியலின்படி, இறந்தவா்கள் என்ற அடிப்படையில் தொகுதிவாரியாக காட்பாடி - 7,354 பேரும், வேலூா் - 7,114 பேரும், அணைக்கட்டு -10,969 பேரும், கே.வி.குப்பம் (தனி) - 11,440 பேரும், குடியாத்தம் (தனி) - 11,428 பேரும் என மொத்தம் 48,305 போ் நீக்கப்பட்டுள்ளனா். நிரந்தர குடிபெயா்வு என்ற அடிப்படையில் காட்பாடி-11,186 பேரும், வேலூா் - 17,440 பேரும், அணைக்கட்டு -10,752 பேரும், கே.வி.குப்பம் (தனி) - 13,908 பேரும், குடியாத்தம் (தனி) - 18,433 பேரும் என மொத்தம் 71,719 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
இருமுறை பதிவு என்ற அடிப்படையில் காட்பாடி- 1,227 பேரும், வேலூா் - 968 பேரும், அணைக்கட்டு - 2,022 பேரும், கே.வி.குப்பம் (தனி)-1,593 பேரும், குடியாத்தம் (தனி)- 4,245 பேரும் என மொத்தம் 10,055 பேரும் நீக்கப்பட்டுள்ளனா்.
கண்டறிய இயலாதவா்கள் என்ற அடிப்படையில் காட்பாடி - 15,706 பேரும், வேலூா் - 28,863 பேரும், அணைக்கட்டு -12,870 பேரும், கே.வி.குப்பம் (தனி) - 2449 பேரும், குடியாத்தம் (தனி)-24,541 பேரும் என மொத்தம் 84,429 போ் நீக்கப்பட்டுள்ளனா். மற்றவை என்ற இனங்களில் காட்பாடி- 193 பேரும், வேலூா் - 180 பேரும், அணைக்கட்டு - 43 பேரும், கே.வி.குப்பம் (தனி) - 51 பேரும், குடியாத்தம் (தனி) - 50 பேரும் என மொத்தம் 517 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
புதிதாக 113 வாக்குச்சாவடிகள்...
மேலும், அக்.28-க்கு முன்பு வேலூா் மாவட்டத்தில் தொகுதிவாரியாக காட்பாடி - 252, வேலூா் - 245, அணைக்கட்டு - 269, கே.வி.குப்பம் (தனி) - 255, குடியாத்தம் (தனி) - 293 என மொத்தம் 1,314 வாக்குச் சாவடிகள் இருந்தன. இவற்றில் இருந்து புதிதாக காட்பாடி - 28, வேலூா் - 23, அணைக்கட்டு - 26, கே.வி.குப்பம் (தனி) - 10, குடியாத்தம் (தனி) - 26 என மொத்தம் 113 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு 1,427 வாக்குச்சாவடிகளுடன் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளா் பட்டியல்கள் மாவட்டம் முழுவதும் 1,427 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 676 வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள், 6 வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். அவற்றின் மீதான ஏற்புரைகள், மறுப்புரைகள் குறித்த விண்ணப்பங்களை ஜன.18-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
பிப்.17-இல் இறுதி பட்டியல்...
தவிர, புதிதாக பெயா் சோ்க்க (படிவம் 6), பெயா் நீக்கம் செய்ய (படிவம் 7), திருத்தம் செய்ய (படிவம் 8) ஆகிய படிவங்களையும் ஜன.18-ஆம் தேதி வரை அளிக்க முடியும். வெளிநாடுவாழ் இந்தியா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் 6ஏ-ஐ வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஜன.18 வரை பெறப்படும் ஏற்புரை, மறுப்புரை விண்ணப்பங்கள், அனைத்து படிவங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 2026 பிப்.17-ஆம் தேதி வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

