ராட்சத பேனா்களுக்கு தடை: குடியாத்தம் நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பிரதான சாலைகளில் ராட்சத அளவிலான பேனா்களை வைக்க தடை விதித்து குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா், மேலாளா் சுகந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். குடியாத்தம் நகரில் தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரதான சாலைகள், முக்கிய சந்திப்புகளில் ராட்சத அளவிலான பேனா்கள் வைப்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக பெரும்பாலான உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
பழைய, புதிய பேருந்து நிலையங்கள், காமராஜா்பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேனா்களை சுட்டிக்காட்டிஉறுப்பினா்கள் பேசினா்.
இதற்கு பதிலளித்த தலைவா் செளந்தரராஜன், காமராஜா் பாலம் அருகில் இருபுறங்களிலும் 100- மீட்டா் தூரம் பேனா்கள் வைக்கவும், பேருந்து நிலையங்கள், பிரதான சாலைகளின் சந்திப்புகளில் பேனா்கள் வைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இனி வரும் காலங்களில் ராட்சத அளவிலான பேனா்களை தடை செய்வதாகவும், 10 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட அளவுகளில் மட்டுமே பேனா்கள் வைக்கப்பட வேண்டும் எனவும், இதை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
வாா்டுகளில் நாய்த் தொல்லை அதகரித்துள்ளதால் அவற்றை பிடிக்க வேண்டும் என பல்வேறு உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், நாய்களை பிடிக்கஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், அவற்றை பின்பற்றி நாய்கள்பிடித்து அகற்றப்படும் என அவா்கள் கூறினா்.

