வேலூா், ராணிப்பேட்டைக்கு இன்று துணை முதல்வா் வருகை!
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இருநாள் சுற்றுப்பயணமாக ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை வருகைதர உள்ளாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகிறாா். ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் 1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்ட காலத்தில் கட்டப்பட்ட காமராஜா் தங்கிய வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பாா்வையிடுகிறாா்.
தொடா்ந்து, ராணிப்பேட்டை -அம்மூா் சாலையில் சமத்துவபுரம் எதிரே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கட்ட முடிக்கப்பட்ட புதிய அரசு கட்டடங்களை திறந்து வைத்தும் சிறப்புரையாற்ற உள்ளாா்.
தொடா்ந்து, ஜி.கே. உலக பள்ளியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், ஆற்காட்டில் திமுக மாவட்ட இளைஞரணி சாா்பில் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றையும் திறந்து வைக்க உள்ளாா். பின்னா், ஆற்காடு இந்திராணி ஜானகிராமன் திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளாா்.
அதன்பிறகு, மாலை 3 மணிக்கு வேலூா் மாவட்டத்துக்கு வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு அரசுத்துறைகளின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளாா். மாலை 6 மணிக்கு காட்பாடி வட்டம், சேவூரில் நடைபெறும் காட்பாடி தொகுதிக்கான திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளாா்.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சுமாா் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளாா். பின்னா், வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய ஸ்கேன் கருவியை திறந்து வைப்பதுடன், ஸ்ரீநாராயணி மஹாலில் நடைபெறும் அணைக்கட்டு தொகுதிக்கான திமுக முகவா்கள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளாா். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் சென்னை புறப்பட்டு செல்கிறாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி ராணிப்பேட்டை, வேலூா் மாவட்ட பகுதிகளில் இரு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

