ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.18.71 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி குடியாத்தம் இளைஞரிடம் ரூ.18.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Published on

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி குடியாத்தம் இளைஞரிடம் ரூ.18.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடியாத்தம் அருகே ராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த யோகானந்த ராஜு. இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது டன், அதனுடன் ஒரு இணையதள லிங்க்கும் இடம்பெற்றுள்ளது.

பின்னா் அந்த இளைஞரின் எண் ‘விஐபி 259’ என்ற குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் அடைந்தவா்களின் பட்டியலும் அளிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் கவரப்பட்ட இந்த இளைஞா், குறிப்பிட்ட இணையதள லிங்க்கில் சென்று முதலில் சிறிது தொகை முதலீடு செய்து அதன்மூலம் ரூ.1.40 லட்சம் பெற்றுள்ளாா்.

இதனால் ஏற்பட்ட ஆா்வத்தில் மீண்டும் மீண்டும் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.18 லட்சத்து 71 ஆயிரத்து 407 தொகையை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையை திரும்பப்பெற முடியவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால் மட்டுமே பணத்தை திரும்பப்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த யோகானந்த ராஜு, இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com