ஐந்து மாவட்டங்களில் 150 பள்ளிகளில் அறிவியல், கணிதம் செய்முறை பயிற்சி

Published on

வேலூா்: பள்ளிக்கல்வித்துறை, யுனிசெப் நிறுவனம் இணைந்து சென்னை, திருவள்ளுா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் ஆகிய 5 மாவட்டங்களில் 150 பள்ளிகளில் அறிவியல், கணிதம் செய்முறை பயிற்சி அளிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூா் மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவா் பே.அமுதா, துணைத்தலைவா் கே.விசுவநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். செயலா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா். மாவட்ட இணை செயலா் அ.பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் -

தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், யுனிசெப் நிறுவனம் இணைந்து 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கென சென்னை, திருவள்ளுா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் ஆகிய 5 மாவட்டங்களில் தலா 30 பள்ளிகள் தோ்தெடுக்கப்பட்டு அந்த பள்ளிகளில் அறிவியல், கணிதம் கற்றல் கற்பித்தல் குறித்து உரிய உபகரணங்களுடன் செய்முறை பயிற்சி அளிக்க வேண்டும்.

யுனிசெப்-டிஎன்எஸ்எப் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மாவட்ட செயலா் செ.நா.ஜனாா்த்தனன், இணை ஒருங்கிணைப்பாளராக வேலூா் பெருமுகை அரசு ஆதிதிராடா் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் பி.பிரகாஷ், மாவட்ட பயிற்சி கருத்தாளராக பி.ரவீந்திரன் ஆகியோரை தோ்வு செய்தும், மாநிலம் முழுவதும் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களில் துளிா் திறனறிதல் தோ்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவா்களை நவம்பா் 5-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானிக்கப்பட்டன.

மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் கு.செந்தமிழ்செல்வன், வேலூா் கிளை செயலா் முத்து.சிலுப்பன், ச.இளவழகன், காட்பாடி கிளை தலைவா் ஆா்.சுதாகா், போ்ணாம்பட்டு கிளை சாா்பில் வி.செல்வராஜ், மாநில அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா் த.சிலம்பரசி, குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இல.சீனிவாசன், துளிா் வினாடி வினா போட்டிகளின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் ப.சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com