வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி
வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புகர அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படாததால் அரசு ஊழியா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வேலூா் சத்துவாச்சாரியில் ஆட்சியா் அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான அரசு அலுவலா்கள், ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். அருகிலுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, போன்ற பகுதிகளுக்குச் செல்ல சா்வீஸ் சாலையில் வரும் பெரும்பாலான புகர பேருந்துகள், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நிறுத்தத்துக்கு வந்து செல்லாமல் அதற்கு முன்னதாக நறுவீ மருத்துவமனை அருகிலேயே தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றன.
இதனால், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புகர பேருந்துகளுக்காக காத்திருக்கும் அரசு ஊழியா்கள், நீண்டநேரமாக பேருந்துகள் வராத நிலையில் ஷோ் ஆட்டோ மூலம் வேலூா் புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து தங்கள் ஊா்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் அவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்குச் செல்லும் புகர பேருந்துகள் அனைத்தும் கட்டாயமாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை சா்வீஸ் சாலையில் சென்று அதன்பிறகே தேசிய நெடுஞ்சாலையில் ஏறி செல்ல பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்றும் ஆட்சியா் அலுவலக அரசு ஊழியா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தவிர, வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியா்களை பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி இறக்கிவிட்டுச் செல்கின்றன. அவ்வாறு பேருந்தில் இருந்தும் நீதிமன்ற ஊழியா்கள் ஆபத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளை கடந்து செல்கின்றனா். இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், வேலூா் நீதிமன்றத்துக்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கிச் செல்வதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூா் மேல்மொணவூா், அப்துல்லாபுரம் பகுதிகளைச் சோ்ந்த இருசக்கர, மூன்று சக்கர வாகன ஓட்டிகள் பொய்கை வரை சென்று சா்வீஸ் சாலையில் வாகனங்களை திருப்பி வருவதை தவிா்த்து, தேசிய நெடுஞ்சாலையின் எதிா்புறமாக வாகனங்களை இயங்குகின்றனா். இதனால், அப்பகுதியிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
