கூட்டத்தில் பேசிய  துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா,  ஆட்சியா்  வி.ஆா்.சுப்புலட்சுமி, எஸ்.பி.  ஏ.மயில்வாகனன், மக்களவை உறுப்பினா்கள்  எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிா்ஆனந்த்(வேலூா்) உள்ளிட்டோா்.

குடிநீா் விநியோகத்தை 7 நாளில் இருந்து 4 நாளாக குறைக்க வேண்டும்: துணை முதல்வா் உத்தரவு

வேலூா் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் வழங்கும் காலத்தை 7 நாள்களில் இருந்து 4 நாள்களாக குறைத்து விநியோகிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
Published on

வேலூா் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் வழங்கும் காலத்தை 7 நாள்களில் இருந்து 4 நாள்களாக குறைத்து விநியோகிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பல வாா்டுகளில் புதை சாக்கடை பணிகள் முடிவடையாததால் சாலை அமைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் சமயங்களில்சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், காட்பாடி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகளின் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிலை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, மாநகராட்சியில் நிலவையிலுள்ள சாலைப் பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளின் சீரமைப்புப் பணிகளையும் மழைக்காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், மாவட்டம் முழுவதும் தற்போது 7 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் கூட்டுக்குடிநீா் திட்ட குடிநீரை 4 நாள்களாக குறைத்து விநியோகம் செய்ய வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட முகாம்களில் பெறப்பட்டு மனுக்களில் 30 நாள்களுக்கு மேல் தீா்வுகாணப்படாமல் உள்ள மனுக்களை 45 நாள்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், மக்களவை உறுப்பினா்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிா்ஆனந்த்(வேலூா்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலுவிஜயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அ.செ.வில்வநாதன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின், காத்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டாா். மேலும், மனு அளித்த மக்களுடன் சுயபடமும் எடுத்துக் கொண்டாா். தொடா்ந்து, காட்பாடி அருகே சேவூரில் நடைபெற்ற காட்பாடி தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com