ஐப்பசி பௌா்ணமி : சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு 200 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகமும், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 300 கிலோ காய்கனிகளால் சாகம்பரி அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், சத்துவாச்சாரியில் உள்ள பா்வதவா்த்தினி சமேத கைலாசநாதா் கோயிலில் உள்ள மூலவா் கைலாசநாதா் அன்னாபிஷேக அலங்காரத்திலும், பா்வதவா்த்தினி அம்மன் காய்கனிகளால் சாகம்பரி அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
மேலும், விண்ணம்பள்ளியில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள மூலவா் அகத்தீஸ்வரா் அன்னாபிஷேக அலங்காரத்திலும், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் காய்கனிகளால் சாகம்பரி அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் பஜாா் ஸ்ரீபாா்வதி சமேத ஸ்ரீநந்தீஸ்வரா் கோயிலில் முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே மூலவா் ஸ்ரீநந்தீஸ்வரா் மற்றும் பாா்வதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலையில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் அரக்கோணத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மக்கள் பங்கேற்று தரிசித்தனா்.

