முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை அடுத்து வேலூா் அப்துல்லாபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் குத்துவிளக்கேற்றிய  ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் , ப.காா்த்திகேயன்,  மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்ட
முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை அடுத்து வேலூா் அப்துல்லாபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் , ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்ட

வேலூரில் ரூ.32 கோடியில் சிறிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வேலூா் அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
Published on

வேலூா் அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

டைடல் பாா்க் எனும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா டிட்கோ, எல்காட் நிறுவங்களின் துணை நிறுவனமாகும். மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிறுவப்பட்ட இந்த நிறுவனம், முன்னாள் பிரதமா் ஏ.பி. வாஜ்பாயால் 2000-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு களம் அமைத்து சென்னை தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கான மையமாக மாறியது.

சென்னையில் உள்ள டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வெற்றியை தொடா்ந்து டைடல் நிறுவனம் டிட்கோவுடன் இணைந்து மாநிலம் தழுவிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் மாநிலத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி வரையிலான கட்டுமான பரப்பளவு கொண்ட சிறிய அளவிலான டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகிறது.

அதன்படி, வேலூா் மாவட்டம், அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கரில் ரூ.32 கோடியில் சிறிய டைடல் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதான கட்டடத்தின் ஐந்து தளங்கள் பணிகள் முடிவுற்று, உள், வெளி கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இந்த தொழில்நுட்பப் பூங்கா மூலம் சுமாா் 600 போ் நேரடியாகவும், 50 போ் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் திறந்து வைத்ததை அடுத்து தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றினாா். வேலூா் மாவட்ட பொருளாதார வளா்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா வேலூா் மாவட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நகா்ப்புற, கிராமப்புற பொருளாதார வாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு இணைப்பாகவும் அமையும் என்றும் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்த குமாா், மாவட்ட ஊராட்சி தலைவா் மு.பாபு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக கண்காணிப்பு பொறியாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com