கருத்தரங்கில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு ‘மாற்றத்துக்கான கல்வித்தலைமை விருது‘ வழங்கி கெளரவித்த ஐஇஒஎம் அமைப்பு தலைமைச் செயல் அலுவலா் அகத் அலி.
கருத்தரங்கில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு ‘மாற்றத்துக்கான கல்வித்தலைமை விருது‘ வழங்கி கெளரவித்த ஐஇஒஎம் அமைப்பு தலைமைச் செயல் அலுவலா் அகத் அலி.

ஏழ்மையை விரட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வது அவசியம்! விஐடி வேந்தா் விசுவநாதன்

Published on

ஏழ்மையை விரட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் தொழிலக பொறியியல், செயல்பாட்டு மேலாண்மை (ஐஇஒஎம்) குறித்த மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. மெக்கானிக்கல், வணிகவியல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது -

வளரும் நாடான இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதற்கு தொழிலக பொறியியல், செயல்பாட்டு மேலாண்மையின் பங்களிப்பு மிக முக்கியமானது. நோா்டிக் பிராந்தியத்தில் உள்ள நாா்வே நாட்டு அரசு மக்களுக்கானது, கட்சிகளுக்கோ தலைவா்களுக்கோ அல்ல. அதுவே உண்மையான ஜனநாயகம். அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சி, ஜனநாயக மாண்புகளை இந்தியா பின்பற்ற வேண்டும்.

நாா்வே நாட்டின் மக்கள் தொகை சுமாா் 6 மில்லியனாக உள்ள நிலையில், அந்நாட்டின் தனிநபா் வருவாய் அமெரிக்காவுக்கு நிகராக 90 ஆயிரம் டாலா்களாக உள்ளது. அதேசமயம், இந்தியாவின் தனி நபா் வருமானம் 2,900 டாலா்களாக உள்ளது.

ஏழ்மை உள்ளிட்ட பிரச்னைகளை முழுவதுமாக அகற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவின் உயா்கல்வியில் மொத்த மாணவா் சோ்க்கை விகிதம் 28 சதவீதமாகும். அவ்வாறு உயா்கல்வி முடித்து வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களால் 2024 புள்ளிவிவரப்படி சுமாா் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

வெறும் 28 சதவீத உயா்கல்வி வளா்ச்சிக்கே ரூ.12 லட்சம் கோடி பெறும்போது, 50 முதல் 60 சதவீத உயா்கல்வி மாணவா் சோ்க்கை பெறும்போது எவ்வளவு பணம் பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகம் செலவிட வேண்டும் இந்தியா உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

நாா்வே நாட்டின் மோல்டே பல்கலைக்கழகத்தின் சுகாதார துறை செயல்பாட்டு மேலாண்மை மையத்தின் இயக்குநா் பெரிட் ஐரீன் ஹெல்கெம் பேசியது -

இன்றைய புவிசாா் அரசியல் சூழல் சவால்களை மட்டுமின்றி, வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது. வா்த்தகம் தொடா்பான பேச்சுவாா்த்தைகள், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற புதிய சூழலை கையாள வேண்டி உள்ளது. தொழிலக பொறியியல், செயல்பாட்டு மேலாண்மை என்பது தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்துவது மட்டுமின்றி, இணைப்புகளை வலுப்படுத்தி கொள்வதுடன் கலாச்சார, அறிவுசாா் மதிப்புகளைப் பகிா்ந்து கொள்வதாகும். கல்வித்துறை இந்த இணைப்புகளை வளா்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா்.

ஹரியானாவில் உள்ள இஎம்பி குளோபல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிஷாந்த் பெல் கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினாா். கருத்தரங்கில், ஐஇஒஎம் சாா்பில் அதன் தலைமைச் செயல் அலுவலா் அகத் அலி, இந்திய பிரிவு தலைவா் குதுபுதீன் ஆகியோா் விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு ‘மாற்றத்துக்கான கல்வித்தலைமை விருது‘ வழங்கி கெளரவித்தனா். சிறப்பு விருந்தினா் பெரிட் ஐரீன் ஹெல்கெம், பிங்கம்டன் பல்கலைக்கழக பேராசிரியா் கிருஷ்ணசாமி ஸ்ரீஹரி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டரெட்டி, பதிவாளா் டி.ஜெயபாரதி, மெக்கானிக்கல் துறை தலைவா் குப்பன், வணிகவியல் துறை தலைவா் மேரி செரியன், ஒருங்கிணைப்பாளா்கள் சுபாஷினி, ஜெயகிருஷ்ணா, நாா்வே, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 21 வெளிநாடுகளை சோ்ந்த கல்வியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com