யூரியாவுக்கு பதிலாக நானோ யூரியா பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும்: வேளாண் இணை இயக்குநா்
விளைச்சலை அதிகரிக்க யூரியாவுக்கு பதிலாக நானோ யூரியாவை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - பெரும்பாலான விவசாயிகள் பயிா்களில் நல்ல விளைச்சலை பெற ரசாயன உரங்களையே பயன்படுத் துகின்றனா். அதிலும் யூரியாவின் பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. யூரியா விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும் விரைவாக அது நிலத்தை பாதிக்கக்கூடும்.
யூரியாவை அடியுரமாகவோ, மேல் உரமாகவோ இடும்போது 30 முதல் 35 சதவீதம் சத்து மட்டுமே பயிருக்கு கிடக்கிறது. மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் சத்து நிலம், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதுடன், ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது. இவ்வாறு சத்து வீணாவதை தடுக்கவும், நிலம் கெடாமலிருக்கவும் நானோ யூரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நானோ யூரியா தாவர ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் திரவமாகும். இது பயிா்களுக்குதேவையான நைட்ரஜனை திறம்பட வழங்குகிறது. திட யூரியாவைவிட மிகக்குறைந்த அளவே தேவைப்படுகிறது.
பயிா்களில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. சக்தி சேமிப்பு, குறைந்த காா்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்துக்கு வழிவகுக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிறது.
நானோ யூரியா இலைகளின்மீது தெளித்த ஒரு மணி நேரத்துக்குள் 80 முதல் 90 சதவீதம் சத்துக்கள் இலைகளில் உறிஞ்சப்படுகிறது. எனவே, நானோ யூரியாவைப் பயன்படுத்தினால் 10 முதல் 20 சதவீதம் விளைச்சல் அதிகரிப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அடியுரமாக யூரியா அல்லது கலப்பு உரங்களை பயன்படுத்திவிட்டு மேல் உரமாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம். இதனால் 50 சதவீதம் யூரியா பயன்பாட்டை குறைக்கலாம்.
மேலும் 20 சதவீதம் விளைச்சல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 500 மிலி கொண்ட ஒரு பாட்டில் நானோ யூரியா விலை ரூ.240. நானோ யூரியா தற்போது அனைத்து கூட்டுறவு, தனியாா் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 125 லிட்டா் தண்ணீரில் 250 மிலி நானோ யூரியாவை கலந்து டிரோன் மூலம் 5 நிமிடங்களில் தெளிக்கலாம்.
நானோ யூரியாவை 2 முறை முதலில் நெல் நடவு செய்த 25 நாள்களில் ஒரு முறையும், பின்பு 25 நாள்கள் கழித்து 2-ஆவது முறையும் தெளிக்கலாம். நானோ யூரியாவை தண்ணீரில் கலந்தவுடன் தெளிக்க வேண்டும். விசைத் தெளிப்பான்கள் மூலமாக தெளித்தால் அதிக நேரம் தேவைப்படும்.
ஒரு மூட்டை சாதாரண யூரியாவுக்கு பதிலாக ஒரு பாட்டில் நானோ யூரியா பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. எனவே, விவசாயிகள் நானோ யூரியா பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். யூரியா மண்ணில் இடுவதை குறைக்க வேண்டும். தீவன பயிா்களுக்கு அதிகளவில் யூரியா பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
இப்கோ நிறுவனம் நானோ யூரியா வாங்கி பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சம் வரை வழங்க அறிவித்துள்ளது. நானோ யூரியா வாங்கிய 31-ஆவது நாளிலிருந்து 12 மாதத்துக்குள் விபத்துக்கு காப்பீடு பெறலாம். காப்பீட்டுக்கான பிரீமியத்தை இப்கோ நிறுவனமே செலுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
