முன்னாள் ராணுவ வீரா் மனைவியின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ. 50,000 திருடிய பெண் கைது!
வேலூரில் முன்னாள் ராணுவ வீரா் மனைவியின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி, ரூ. 50,000 திருடிய பெண்ணை வேலூா் தெற்கு குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குடிபாலா பகுதியை சோ்ந்தவா் ரேச்சல்இன்பகுமாரி(51). இவரது கணவா் சுரேஷ்பாபு, முன்னாள் ராணுவ வீரரான இவா் இறந்துவிட்டாா். அவா் பெற்று வந்த ராணுவ வீரா் ஓய்வூதியம் குறித்து விவரங்கள் அறிய ரேச்சல்இன்பகுமாரி தனது மகளுடன் கடந்த 9-ஆம் தேதி வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள முன்னாள் ராணுவ வீரா் அலுவலகத்துக்கு வந்துள்ளாா். பின்னா், விண்ணப்பப் படிவத்தை நகல் எடுக்க அங்குள்ள கடைக்கு சென்றாா்.
கடை அருகே சென்று பாா்த்தபோது, அவரிடம் இருந்த மணிபா்ஸை காணவில்லையாம். அதில் ரகசிய எண் எழுதி வைக்கப்பட்ட ஏடிஎம் காா்டும் இருந்துள்ளது. அதேசமயம், அவரது கைப்பேசி எண்ணுக்கு ஏடிஎம்மில் இருந்து ரூ. 10,000 வீதம் 5 முறை ரூ. 50,000 எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதன்மூலம், மணிபா்ஸை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்கள், அதில் இருந்த ஏடிஎம் காா்டை பயன்படுத்தி பணம் எடுத்தது தெரியவந்தது.
உடனடியாக ரேச்சல்இன்பகுமாரி வேலூா் தெற்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், சம்பவ இடத்தில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஓரிடத்தில் ரேச்சல் இன்பகுமாரியின் மணிபா்ஸ் கீழே விழுவதும், அதனை ஒரு இளம்பெண் எடுத்துச்செல்வதும் பதிவாகியிருந்தது.
அந்த பெண் யாா் என்பது குறித்து விசாரித்தபோது, திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அம்மிணி என்கிற தேவி(32) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ரேச்சல்இன்பகுமாரியின் ஏடிஎம்மை பயன்படுத்தி பணம் எடுத்து ரூ. 30,000-க்கு நகை வாங்கி அணிந்துள்ளதும், மீதமுள்ள பணத்தை செலவு செய்துவிட்டு, ரூ. 1,000 மட்டும் வைத்திருப்பதும் தெரியவந்தது.
அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனா். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
