ஆன்லைன் மூலம் வேலூா் மக்களிடம் 15 நாள்களில் ரூ.1.60 கோடி மோசடி

ஆன்லைன் மூலம் வேலூா் மாவட்ட மக்களிடம் கடந்த 15 நாள்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
Published on

வேலுாா்: ஆன்லைன் மூலம் வேலூா் மாவட்ட மக்களிடம் கடந்த 15 நாள்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. எனினும், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டுள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்களிடம் அண்மைக் காலமாக ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்யப்படும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறியும், டிஜிட்டல் கைது, ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை என பல வழிகளில் இத்தகைய ஆன்லைன் மோசடி செயல்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் வழக்குகள் குவிந்து வருவதை அடுத்து ஆன்லைன் மோசடியில் மக்கள் ஏமாறாமல் இருக்க போலீஸாா் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிககளை நடத்தி வருகின்றனா். எனினும், ஆன்லைன் மோசடியில் மக்கள் பணத்தை இழப்பது தொடா் கதையாகி வருகிறது.

இதுகுறித்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கூறியது - குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்கும் என்ற பேராசையால் சிலா் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைகின்றனா். இத்தகைய ஆன்லைன் மோசடியில் படித்தவா்களே எளிதாக சிக்குகின்றனா். இத்தகைய ஆன்லைன் மோசடி தொடா்பாக தினமும் 10-க்கும் மேற்பட்ட புகாா்கள் வேலூா் சைபா் குற்றப்பிரிவுக்கு வருகிறது.

அதன்படி, கடந்த நவ.1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மட்டுமே 162 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் மட்டும் ரூ.ஒரு கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் தொகையை மக்கள் இழந்துள்ளனா்.

எனினும், இந்த வழக்குகளில் ரூ. 11 லட்சத்து 25 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மோசடி செயல்களில் இருந்து உஷாராக இருக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com