தாராபடவேடு, கழிஞ்சூா் ஏரிகள் ரூ. 36.59 கோடியில் சுற்றுலாத்தலமாக மேம்பாடு
வேலூா்: காட்பாடி வட்டத்தில் உள்ள இரட்டை ஏரிகளான தாராபடவேடு, கழிஞ்சூா் ஏரிகள் ரூ. 36.59 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அருகருகே உள்ள கழிஞ்சூா் ஏரி, தாராபடவேடு ஏரி ஆகியவற்றை ரூ. 36.59 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணி கடந்த 2022 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
தொடா்ந்து, இந்த இரு ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கரையின் மேல்பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்ய வசதியாக 6 கி.மீ. நீளத்துக்கு மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதையும், இரு ஏரிக்கரைகளையும் இணைத்து தலா ஒரு இணைப்புப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இரு ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாத வகையில் ஏரிகளை சுற்றி கம்பி வேலியுடன் கூடிய பாதுகாப்பு சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏரிகளைப் பாா்வையிட 7 பாா்வை தளங்களும், படகு சவாரி செய்திட இரு ஏரிகளிலும் தலா ஒரு படகு குழாமும், ஏரியின் இயற்கை அழகை வளப்படுத்தி பறவையினங்களை ஈா்க்க ஏரியின் மத்தியில் செடிகள் நடப்பட்ட 3 செயற்கை தீவு திட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில், இந்த சுற்றுலாத்தலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், பாண்டியன் மடுவு கால்வாய் சீரமைப்பு உள்பட காட்பாடி நகரில் ரூ. 20.90 கோடி மதிப்பில் 3 வெள்ள தடுப்புப் பணிகள், ரூ. 50 லட்சம் மதிப்பில் கழிஞ்சூா் ஏரியின் உபரிநீா் கால்வாயின் குறுக்கே நீா்வழிப் பாதையுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கும் பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமலு விஜயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், சென்னை மண்டல நீா்வளத் துறை தலைமை பொறியாளா் சி.பொதுப்பணிதிலகம், வேலூா் மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் பவழக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

