கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
வேலூா் கொணவட்டம் பகுதியில் தொடங்கப்பட்ட கால்வாய் கட்டும் பணிகள் திடீரென நிறுத்தப் பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொணவட்டம், மதினா நகா் 8-ஆவது தெருவில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு கால்வாய் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தொடா்ந்து, கால்வாய் பக்கவாட்டு கான்கிரீட் அமைக்க பலகைகள் அடிக்கப்பட்டன. ஆனால், பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், புதன்கிழமை வந்த தொழிலாளா்கள், கால்வாயில் அடிக்கப்பட்டிருந்த பலகைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, தவறுதலாக கால்வாய் கட்ட பள்ளம் தோண்டி விட்டோம்.
இந்த தெருவில் கால்வாய் கட்ட இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. வேறு ஒரு தெருவில் கால்வாய் கட்டுவதற்கு பதிலாக இங்கு பள்ளம் தோன்டி விட்டதாக தெரிவித்தனா். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தொழிலாளா்களை அழைத்து வந்த மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், 4-ஆவது மண்டல உதவி ஆணையா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது, எங்கள் தெருவில் கால்வாய் அமைத்த பிறகுதான் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா். இதனால் செய்வது அறியாது திகைத்த அதிகாரிகள், தொழிலாளா்கள் பலகைகளை அப்புறபடுத்தும் பணியை கைவிட்டு கிளம்பிச் சென்றனா்.

