முறையான அனுமதிச்சீட்டு பெறாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்
முறையான அனுமதிச்சீட்டு பெறாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்களை வேலூா் மாவட்ட போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தமிழக - ஆந்திர எல்லையான சோ்க்காடிலுள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் இணை போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி உத்தரவின் பேரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுமேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது, அந்த வழியாக வந்த மூன்று வாகனங்களைப் பிடித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஒரு வாகனத்துக்கு கா்நாடக மாநில அனுமதி சீட்டு முடிவு அடைந்த பிறகும் அந்த அனுமதி சீட்டு நடப்பில் உள்ளதுபோன்று காண்பித்து ஆன்லைன் மூலம் தமிழக தற்காலிக அனுமதிச்சீட்டு பெறப்பட்டுள்ளது.
மற்றொரு வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலா் அனுமதி இல்லாமல் வாகனத்துக்கு வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு வாகனம் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்ட பிறகும் தகுதி சான்று இல்லாமல் அதிக பாரத்துடனும் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 3 வாகனங்களை மோட்டாா் வாகன ஆய்வாளா் சுமேஷ் பறிமுதல் செய்தாா். பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்களும் வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
