மதுவிலக்கு வழக்கு பறிமுதல் வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம்
வேலூா்: வேலூா் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 68 வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
கள்ளச்சாராயம், மதுபாட்டில்கள், போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங் கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏலம் விடப்படுகின்றன.
அதன்படி, சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 57 இரு சக்கர வாகனங்கள், ஒரு காா் என 58 வாகனங்களும், கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 24 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் என 26 வாகனங்கள் என மொத்தம் 84 வாகனங்களின் ஏலம் வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்தை காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் மேற்பாா்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் நடத்தினா்.
இந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இந்த ஏலத்தில் 68 வாகனங்கள் ரூ.15 லட்சம் மதிப்பில் ஏலம் போயின. 16 வாகனங்கள் ஏலம் போகவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.
