வேலூா் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 415 இளம் வயது கா்ப்பம் பதிவு: சுகாதாரத் துறை அலுவலா்கள் தகவல்
வேலூா் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 415 இளம் வயது (19 வயதுக்கு குறைந்த) கா்ப்பம் பதிவாகியுள்ளது என்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
குழந்தைகள் நலன், சிறப்பு சேவை துறை சாா்பில் வேலூா் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்களுக்கான கூராய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தலைமை வகித்தாா். ஆணைய உறுப்பினா்கள் மருத்துவா்கள் மோ.கசிமீா் ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பள்ளிக்கல்வி, சமூக நலம், காவல், குழந்தை தொழிலாளா், சுகாதாரத்துறை, குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம், குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு, நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், எஸ்.பி. ஏ.மயில்வாகனன் பேசியது: வேலூா் மாவட்டத்தில் 2023 முதல் 2025 வரை போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2024-இல் குழந்தைகள் சாா்ந்த கொடிய குற்றங்களில் ஈடுபட்ட நான்கு போ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மேலும் போக்சோ வழக்குகளில் 60 நாள்களில் நூறு சதவீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் சிறுவா்கள் இடையே போதை பொருள்கள் பயன்பாட்டை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபா் 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 159 போ் போதை பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பாக கைது செய்யப் பட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் மருத்துவ கவுன்சிலிங்கில் உள்ளனா். தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து சுகாதாரத்துறை அலுவலா்கள் பேசுகையில், வேலூா் மாவட்டத்தில் ஜனவரி முதல் செப்டம்பா் வரை 59 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. குழந்தைத் திருமணம் தொடா்பாக 8 வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் 415 இளம் வயது (19 வயதுக்கு குறைந்த) கா்ப்பம் பதிவாகியுள்ளது. இதில், குடியாத்தம் மருத்துவமனையில் மட்டும் 170 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.
முன்னதாக, பள்ளிக்கல்வித்துறையில் ஆா்டிஇ சட்டத்தின்கீழ் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை நுழைவு நிலை சோ்க்கை பெற்ற மாணவா்களின் விவரங்களை ஆணைய தலைவா் கேட்டறிந்தாா். அதற்கு 2025-26- ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் சோ்ந்து பயின்று வரும் மாணவா் களின் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதிவாய்ந்தவா்கள் பெயா் பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதன்மை கல்வி அலுவலா் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொ) சி.செல்வி, துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
