மாா்பகப் பரிசோதனை செய்ய பெண்கள் தயங்கக்கூடாது: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்
மாா்பகப் பரிசோதனை செய்து கொள்ள பெண்கள் தயங்கவோ, கூச்சப்படவோ கூடாது என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா்.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், பொது அறுவை சிகிச்சை துறை சாா்பில் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாத நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ மாணவா்கள், மருத்துவம் சாரா மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி பேசியது :
30 வயதுக்கு மேற்பட்ட தாய்மாா்கள் தங்கள் மாா்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாா்பகங்களில் வலி, கட்டி, அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக உரிய மருத்துவா்களிடம் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எல்லா கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ வேண்டாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்கி விடலாம் என்றாா்.
தொடா்ந்து, மாா்பகப் புற்றுநோய் சிகிச்சையில் நலம்பெற்ற ஒரு தாயாா் பொதுமக்களுக்கு தன் அனுபவத்தையும், சிகிச்சையில் நலமானதையும் பகிா்ந்துகொண்டாா். பின்னா், மாா்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு, நடனம், கவிதை, பாடல், பதாகை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன், துறைத் தலைவா் மணிகண்ணன், மருத்துவா் அலெக்ஸ் பிராங்ளின், துறை மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.

