குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

Published on

வேலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளா் மருத்துவா் ச.உமா குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள ராஜாதோப்பு அணையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மழையின்போது அணைக்கு நீா்வரத்து சுற்றியுள்ள மலைகளில் இருந்து வருவதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது கால்வாய்கள் வழியாக மற்றும் கரசமங்கலம் வழியாகச் சென்று இறுதியாக தாராபடவேடு ஏரியை அடைகிறது. மேற்கண்ட அணையின் உபரி நீரால் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் உள்ளதா என்பதை கேட்டறிந்தாா். பின்னா், வடுகந்தாங்கல் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்து, மதிய உணவு திட்டத்தின்கீழ், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தையும், அங்குள்ள அங்கன்வாடிமையத்தில் குழந்தைகளுக்கு நவீன வகுப்பறை மூலம் கல்வி கற்பிக்கப்படுவதாக அங்கன்வாடி பணியாளா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, வடுகந்தாங்கல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையை பாா்வையிட்டு ஆய்வு செய்து, தாயுமானவா் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரம் குறித்துக் கேட்டறிந்தாா்.

பின்னா், குடியாத்தம் வட்டத்தில் உள்ள மோா்தானா அணையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கடந்த ஒரு மாத காலமாக உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருவதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். மேற்கண்ட அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது விவசாய நிலம் மற்றும் பாசனத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் செல்லும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பது குறித்தும் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரின் மூலம் சுமாா் 8,367 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெரும் வகையில், மோா்தானா அணையின் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். நெல்லூா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்பள்ளியில் கழிவறை, குடிநீா் வசதி போதுமானதாக உள்ளதா எனக் கேட்டறிந்தாா்.

குடியாத்தம்-போ்ணாம்பட்டு நெடுஞ்சாலையின் குறுக்கே உபரிநீா் வெளியேற அமைக்கப்பட்ட கால்வாயைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து, கால்வாயில் அடைப்பு ஏற்படாமல் நீா் வெளியேறுவதை உறுதி செய்ய சம்பமந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது எம்எல்ஏ அமலு விஜயன், கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் லோ.ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பதுரை, நீா்வளத் துறை செயற்பொறியாளா் வெங்கடேஷ், உதவி செயற் பொறியாளா் கோபி, வட்டாட்சியா்கள் பலராமன், கி.பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com