பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட காட்பாடி திருநகா் பகுதி மக்கள்.
பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட காட்பாடி திருநகா் பகுதி மக்கள்.

தரமான சாலை அமைக்கக் கோரி மக்கள் மறியல்

Published on

காட்பாடி திருநகா் பகுதியில் தரமான சாலை கோரி அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சியில் புதை சாக்கடை, கழிவுநீா் கால்வாய்கள் சீரமைத்தல், காவிரி கூட்டுக்குடிநீா் திட்ட குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சில வாா்டுகளில் மட்டும் மட்டும் நிறைவடைந்து புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், சில வாா்டுகளில் பல ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் காட்சியளிக்கின்றன.

அதன்படி, காட்பாடி 11-ஆவது வாா்டு திருநகா் விவேகானந்தா் பிரதான சாலையில் புதை சாக்கடை உள்ளிட்ட பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் புதன்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

பொலிவுறு நகா் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சாலைகள் மோசமான நிலையில் இருப்பது குறித்து வாா்டு உறுப்பினா், மாநகராட்சி ஆணையா், அமைச்சா் உள்ளிட்டோருக்கு பலமுறை புகாா் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பழைய சாலையை சீா் செய்து அதன் மீது புதிய சாலை அமைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், சாலையை சீரமைக்காமல் அதன்மீது புதிய சாலையை அமைக்க முயற்சிக்கின்றனா். தரமான சாலை அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனக்கூறி முழக்கங்கள் எழுப்பினா்.

தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். பணிகளை தரமாக மேற்கொள்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com