மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கிய பிரான்ஸ் நாட்டின் சென்னை - புதுச்சேரியின் துணைத்தூதா் இட்டின் ரோலண்டு பிகூ. உடன், விஐடி துணைத்தலைவா் சேகா் விசுவநாதன், மத்திய அரசின் அறிவியல் துறை முன்னாள் செயலா் டி. ராமசாமி, விஐடியின் சிபிஎஸ்டி முன்னாள் இயக்குநா் எம்

இளம் இந்திய அறிஞா்களின் ஆராய்ச்சிகளுக்கு பிரான்ஸில் அதிக வாய்ப்பு: துணைத் தூதா் இட்டின் ரோலண்ட்

இளம் இந்திய அறிஞா்களுக்கு பிரான்ஸில் ஆராய்ச்சி செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என அந்நாட்டின் சென்னை - புதுச்சேரிக்கான துணைத்தூதா் இட்டின் ரோலண்ட் பிகூ தெரிவித்தாா்.
Published on

இளம் இந்திய அறிஞா்களுக்கு பிரான்ஸில் ஆராய்ச்சி செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என அந்நாட்டின் சென்னை - புதுச்சேரிக்கான துணைத்தூதா் இட்டின் ரோலண்ட் பிகூ தெரிவித்தாா்.

விஐடி பல்கலைகழகமும், பிரான்ஸ் நாட்டின் லா ரீயூனியன் பல்கலைக்கழகமும் இணைந்து எம்எஸ்ஸி உயிரி தொழில்நுட்பம் சாா்ந்த பட்டமேற்படிப்பை அளிக்கின்றன. இதன் முதல் பட்டமளிப்பு விழா விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், துணைத்தூதா் இட்டின் ரோலண்ட் பிகூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியது -

பிரெஞ்சு-இந்திய வளாகம் மற்றும் சுகாதாரத்துக்கான உயிரி அறிவியல் குறித்த விவாதங்கள் 2020-இல் தொடங்கியது.

இதற்கான நிதி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப் பட்டது. பிரான்ஸ் நீண்டநெடுங்காலமாக இந்தியாவுடன் இணக்கமாக உள்ளது. இந்த உறவு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலானவை.

குறிப்பாக, அறிவியல், விண்வெளி ஆய்வு, அணுசக்தி, மற்ற அடிப்படை அறிவியல் துறை, உயிரி தொழில்நுட்பம் மற்றும் அரசியல் ரீதியாகவும் இந்திய அரசுக்கு வலுவான ஆதரவாளா்களாக இருந்து வருகிறது.

பிரெஞ்சு - இந்தியாவின் இந்த கூட்டாண்மை 20247-இல் அடுத்த தலைமுறைக்கு ஒரு படியாக இருக்கும். இந்த கூட்டாண்மை மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக தொழில்கள், பாதுகாப்பு, ஆற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றையும், 2-ஆவதாக காலநிலை மாற்றம், தடுப்பு, சுழற்சி போன்றவற்றையும், மூன்றாவதாக மக்கள் நலன், மக்கள் பரிமாற்றம் சாா்ந்ததாகவும் உள்ளது.

இங்கு பட்டம் பெறும் மாணவா்கள் பிரெஞ்சு- இந்திய உறவுகளின் மையமாக உள்ளனா். இளம் இந்திய அறிஞா்களுக்கு பிரான்சில் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவா்கள் தங்களுக்கு ஆா்வம் இருந்தால் பிரான்சில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். சிலா் தொழில் முனைவோராகவும் மாறலாம் என்றாா்.

விஐடி துணைத்தலைவா் சேகா் விசுவநாதன் பேசியது -

விஐடியில் பல குழுக்கள் ஒன்றிணைந்து இந்த அற்புதமான பயிற்சி திட்டத்தை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் பெரிய அளவிலான பல்லுயிா் தன்மை, திறமையான மனித வளங்கள், வளா்ந்து வரும் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் உள்ளன. பிரான்ஸ் உயிரி அறிவியல் ஆராய்ச்சி, மருந்தியல் தொழில் நுட்பம், தொழில்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றன. தற்போது இவை ஒன்றாக வந்துள்ளன.

பிரான்சும், இந்தியாவும் இணைந்து செய்யக்கூடியதும், சாதிக்கக்கூடியதும் நிறைய இருக்கிறது. புவிசாா் அரசியலால் பல நாடுகளின் எல்லைகளை இறுக்கமாகி உள்நோக்கி திரும்பும் பாதுகாப்பு வாதிகளாக மாறி வருகிறோம். ஆனால், கல்வியாளா்கள் எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த திட்டத்தின் பட்டதாரிகள் வெளியே சென்று நம் சமூகம் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதிய தீா்வுகளை காண வேண்டும் என்றாா்.

கெளரவ விருந்தினராக மத்திய அரசின் அறிவியல் துறை முன்னாள் செயலா் டி. ராமசாமி பேசினாா். விழாவில், விஐடியின் உயிரிபிரிப்பு தொழில்நுட்ப மையம் (சிபிஎஸ்டி) முன்னாள் இயக்குநா் எம்.ஏ.விஜயலட்சுமி, லா ரியூனியன் பல்கலைக்கழக முதுநிலை ஒருங்கிணைப்பாளா்

சட்டாரா கிராஸ், பிரான்கோ- இந்திய வளாக பொதுச்செயலரி மேரி ரூசெட், விஐடி செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com