குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா் வடிந்ததால் வீடுகளுக்கு திரும்பிய மக்கள்!

Published on

வேலூா் கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீா் வடிந்ததை அடுத்து நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா் மழை பெய்தது. இதனால், மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகா், திடீா் நகா், காந்தி நகா், ஆா்.என்.பாளையம், முள்ளிப் பாளையம், சேண்பாக்கம், தொரப்பாடி, அரியூா் போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழந்தது. அப்பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், வேலைக்கு செல்லும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்கு கடந்த ஒரு வாரமாக உணவு, உடை, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. அதேசமயம், குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரை வெளியேற்ற பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கால்வாய் அடைப்புகள் சரிசெய்யப்பட்டதுடன், மோட்டாா் பம்புகளை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டனா்.

இப்பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினா்.

இந்நிலையில், தற்போது மழைநீா் முழுவதும் வெளியேறி வெள்ளம் வற்றியதை அடுத்து நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பினா். மேலும், மழை நீா் தேங்கியிருந்த பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com