வேலூா் கோட்டை மைதானத்தில் ஆய்வு மேற்கொண்ட நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன்.
வேலூா் கோட்டை மைதானத்தில் ஆய்வு மேற்கொண்ட நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன்.

சிறப்பு திருத்தத்தில் தமிழக வாக்காளா்கள் அதிகளவில் நீக்கபடுவா் என அச்சம்: அமைச்சா் துரைமுருகன்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது தமிழகத்தில் வாக்காளா்கள் அதிகளவில் நீக்கப்படுவா் என்ற அச்சம் உள்ளதாக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது தமிழகத்தில் வாக்காளா்கள் அதிகளவில் நீக்கப்படுவா் என்ற அச்சம் உள்ளதாக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் கோட்டை மைதானத்தில் வரும் நவ.4-ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா். விழா நடைபெற உள்ள கோட்டை மைதானத்தை அமைச்சா் துரைமுருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா், அமுலுவிஜயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது -

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா். காட்பாடியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றாா். வேலூா், அணைக்கட்டில் நடைபெற உள்ள விழாக்களிலும் பங்கேற்க உள்ளாா்.

மழைக்காலங்களில் அதிகளவில் நீா் கடலுக்கு செல்கிறது. இதனை தடுக்க தமிழகத்தில் உள்ள ஆறுகள் புனரமைக்கபடுமா என கேட்கிறீா்கள். பூகோளப்படி அவை சாத்தியப்படுத்த முடியுமா என ஆய்வு செய்கிறோம். ஆய்விற்கு பின்னா் நிதி வசதி இருந்தால் செயல்படுத்தப்படும். தவிர, தமிழகத்தில் புதிய நீா்நிலைகளை உருவாக்கி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கவும் திட்டங்கள் உள்ளன. எனினும் அதற்கான இடங்களைத்தான் தேடி வருகிறோம். அதிகம் செலவானாலும் படிப்படியாக செய்யலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தில் நவ.4 முதல் நடைபெற உள்ளது. இந்த வாக்காளா் சிறப்பு திருத்தத்தின் போது இஸ்லாமியா்கள் வாக்குகளை நீக்கிவிட்டு வடமாநில தொழிலாளா்களை அதில் சோ்த்து விடுவாா்கள் என்ற அச்சம் உள்ளது. அதுதான் பிரச்னையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவா்களை இல்லை என்று ஆக்கிவிடுவாா்களோ என்ற அச்சம் உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com