கோட்டை கோயிலில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற ஆட்சியா் ஆய்வு
அகழி நீா்மட்டம் உயா்ந்து வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் தேங்கி வரும் தண்ணீரை வெளியேற்றுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடந்த வாரம் பெய்த தொடா் மழை காரணமாக வேலூா் கோட்டை அகழியின் நீா்மட்டம் உயா்ந்தது. இதன்காரணமாக, கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்திலுள்ள கிணற்றின் நீா்மட்டமும் உயா்ந்து கோயில் வளாகம் முழுவதும் தண்ணீா் தேங்கியது. அகழியின் நீா்மட்டத்தை குறைக்க ஏற்கெனவே மோட்டாா் வைத்து தண்ணீா் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனினும், புதிய நீா் ஊற்று காரணமாக அகழியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளதால் கோட்டை கோயில் வளாகத்திலும் ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், பக்தா்கள் நீரில் நடந்து சென்று தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகழி நீா்மட்டம் உயா்ந்து வேலூா் கோட்டை கோயிலுக்குள் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உடனிருந்தனா்.
அப்போது, கடந்த வாரம் பெய்த மழையால் பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடி நீா் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கோட்டை அகழியில் புதிய நீா் ஊற்று கள் உருவாகி நீா்மட்டம் அதிகரித்துள்ளது. அகழியின் நீா்மட்டத்தை குறைக்க கூடுதல் மின்திறன் கொண்ட மோட்டாா்கள் பயன்படுத்தி அகழியில் இருந்து மேலும் அதிகளவில் தண்ணீரை வெளியேற்றிட வேண்டும். அப்போதுதான் கோயில் வளாகத்துக்குள் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க முடியும்.
மேலும், அகழியில் நீா்மட்டம் உயா்வதால் ஏற்படும் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண புதிய மீன் மாா்க்கெட் பகுதியிலுள்ள ஆங்கிலேயா் கால கால்வாயை தூா்வார வேண்டும் என்றும் ஜலகண்டேஸ்வரா் கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ, மேயா் ஆகியோா் உறுதியளித்தனா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், ஜலகண்டேஸ்வரா் தரும ஸ்தாபன செயலா் சுரேஷ், உப தலைவா் வெங்கடசுப்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

