சாலை வசதி கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல்
வேலூா் அருகே உள்ள வாணியங்குளம் கிராமத்துக்கு சாலை வசதி செய்துதரக்கோரி அந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை அரசுப்பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் ஓட்டேரி, நாயக்கனேரி செல்லும் சாலையின் மலையடிவாரத்தில் வாணியங்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20-க்கும் மேற் ட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு சொந்தமாக உள்ள 150 ஏக்கா் பரப்பளவு நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனா்.
வாணியங்குளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையை பலரும் ஆக்கிரமித்ததால் தற்போது சாலை 10 அடியாக குறைந்துள்ளது. இதனால் தங்களது ஊருக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் ஓடைக்கால்வாயை பயன்படுத்தியும் வருகின்றனா். எனவே, சாலை அமைத்துத் தரவேண்டும், விளக்குகள் அமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். அவா்களது கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போது கால்வாயில் அதிகளவு தண்ணீா் செல்வதால் கிராமத்துக்கு செல்ல பாதை இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இதைத் தொடா்ந்து, தங்களது ஊருக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, வாணியங்குளம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த 53-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பாபிகதிரவன், வேலூா் வட்டாட்சியா் வடிவேல், பாகாயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.
அடுத்த 30 நாள்களுக்குள் வாணியங்குளம் கிராமத்துக்கு சாலை வசதி செய்துதரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
