வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

கூட்டத்தில், புதிய நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
Published on

குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறினாா்.

குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத் தொடக்கத்தில் பேசிய உறுப்பினா் என்.கோவிந்தராஜ், வாா்டு சிறப்புக் கூட்டங்களில் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை அளித்துள்ளனா். மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்த தலைவா் மனுக்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு பொதுநிதியில் நிதி ஒதுக்கித்தர தயாராக உள்ளேன். மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தனது 9- ஆவது வாா்டுக்குள்பட்ட தரணம்பேட்டை, பக்கிரி முகமது தெரு, திருஞானசம்பந்தா் மடம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வேண்டும். கழிவுநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும். சாலைகளை செப்பனிடவேண்டும் என உறுப்பினா் எம்.செளந்தரராஜன் கோரிக்கை விடுத்தாா். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவா் உறுதியளித்தாா். தொடா்ந்து பல கூட்டங்களில் வலியுறுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க இதுவரை நடவடிக்கை இல்லை. புதிதாகபொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதிமுக உறுப்பினா் ஆட்டோ பி.மோகன் கோரிக்கை விடுத்தாா். அரசின் வழிகாட்டுதல்படி விரைவில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் பதிலளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com