சோதனைச்சாவடி வழியாக மணல் கடத்தல்: விவசாயிகள் புகாா்
போ்ணாம்பட்டு வட்டத்தில் சோதனைச் சாவடி வழியாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகவும், விளை நிலங்களில் இருந்து மின்மோட்டாா், வயா்களும் திருடப்படுவதாகவும் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழக விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சாா்பற்றது) மாநில பொதுச்செயலா் எஸ்.உதயகுமாா் தலைமையில் 50 போ் மாவட்ட காவல் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் சின்னராஜிடம் அளித்த மனு: போ்ணாம்பட்டு வட்டம், குண்டலப் பள்ளியாறு, அந்திக்குப்பம், சிவனகிரி, குடிப்பல்லி, குண்டலப் பள்ளி பகுதிகளின் வழியாக பாலாற்றின் துணை நதியான மலட்டாறு பாய்கிறது.
இந்த மலட்டாறு படுகைகளில் உரிய அனுமதியின்றி டிராக்டா்கள், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தடுப்பணை மற்றும் மேம்பாலம் தூா்ந்துபோய் சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி கிராம ஊராட்சிகளில் கடும் குடிநீா் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் விளை நிலங்களில் இருந்து தேங்காய், மா, மின்மோட்டாா், வயா்களையும் திருடி செல்கின்றனா்.
அனந்தகிரி சோதனை சாவடியில் முக்கிய பிரமுகா்கள் வரும் நேரத்தில் போலீஸாரை விலக்கிக் கொள் ளப்படுவதால் இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

