குடியாத்தம் நகராட்சியில் ரூ.12.92 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்
குடியாத்தம் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.12.92-கோடியில் அமைக்கப்பட்ட குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின்வியாழக்கிழமை காணொலியில் தொடங்கி வைத்தாா்.
குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36- வாா்டு மக்களின் குடிநீா்த் தேவைக்காக தற்போது பாலாறு திட்டம் மற்றும் காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் தினசரி இடைவெளியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.12.92- கோடியில் உள்ளூா் நீா் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், விநாயகபுரம் அருகே 23- லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி, எம்பிஎஸ் நகரில் 10- லட்சம் லிட்டா் மற்றும் அசோக் நகரில் 5- லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
மேலும், 1,200- மீட்டா் நீளம் நீா் உந்து குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.இப்பணிகள் முழுமையடைந்ததையடுத்து, குடிநீா் விநியோகப் பணிகளை தமிழக முதல்வா் காணொலியில் தொடங்கி வைத்தாா்.இதையடுத்து தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ள கட்டடத்தில் மாவட்டஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குத்து விளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இதில் எம்எல்ஏ அமலுவிஜயன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராசன், நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா், மேலாளா் சுகந்தி, அலுவலா்கள் தீனதயாளன், வெங்கடேசன், முகமது அலி, பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன், டி.பி.என்.கோவிந்தராஜ் மற்றும் எம்.எஸ்.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

