6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது நிச்சயம்: துரைமுருகன்

காட்பாடி தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் சிப்காட் தொழிற்பேட்டை நிச்சயமாக அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

News image
நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் துரைமுருகன்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி தொகுதி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை நிச்சயமாக அமைக்கப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி வட்டம், மாதாண்டகுப்பம், பொன்னை, கீரைசாத்து ஆகிய ஊராட்சிகளில் 465 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 92 லட்சத்து 4 ஆயிரத்து 4 மதிப்பில் வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: மாநில அளவில் என்ன பணிகள் இருந்தாலும் எனது தொகுதிக்கு தேவையான பணிகளை செய்வது அதைவிட முக்கியமான பணியாகும்.

நானும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பணிகளை காட்பாடி தொகுதிக்கு குறிப்பாக பொன்னை பகுதிக்கு நிறைவேற்றி இருக்கிறேன். பொன்னை பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் போன்று எங்கும் திட்டங்கள் கிடையாது.

ரூ. 45 கோடியில் புதிய உயா்மட்ட மேம்பாலம், 2 புதிய பேருந்துகள், பொன்னையிலிருந்து சோளிங்கா் செல்லும் சாலை, பொன்னையிலிருந்து வேலூா், ஆற்காடு செல்லும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு புதிதாக சாலைகள், சோ்க்காட்டில் அரசு கலை கல்லூரி, 60 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனை என பொன்னைக்கு செய்ததைப் போல் வேறு எந்த ஊருக்கும் செய்யவில்லை.

காட்பாடி தொகுதியில் இல்லாத எதுவும் இன்னொரு தொகுதியில் இருக்கக் கூடாது என்ற வகையில், இந்த தொகுதிக்கு பணிகளை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்தப் பகுதியில் படித்த இளைஞா்களுக்கு நல்ல ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கி தரும் வகையில் தற்போது மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமைவதற்கான பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதையும் நான் நிறைவேற்றி விடுவேன். இங்கு தொழிற்சாலைகள் வரும் பட்சத்தில் காட்பாடி தொகுதியைச் சோ்ந்த ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தவிர, காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலை இருந்த இடத்தில் சிப்காட் அமைக்கப்பட்டு அங்கு 2 தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகிறது.

கீரைசாத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளது. அந்த தொட்டியும் உடனடியாக சரி செய்யப்படும். பேருந்து நிறுத்த நிழற்குடை என் தொகுதி நிதியிலிருந்து அமைத்துத் தரப்படும். இன்று இலவச வீட்டு மனை பட்டா பெறாதவா்கள் மனு அளிக்கும் பட்சத்தில் அதன்மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அவா்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாதாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவா் ரா.வெங்கடேசன், காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.