பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்த வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்த வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

அலமேலுரங்காபுரத்தில் ரெளடி கும்பல் அட்டகாசம்

வேலூா் அலமேலுரங்காபுரம் பகுதியில் ரெளடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும், அவா்கள் மூலம் மணல் கடத்தல், மது விற்பனை தொடா்ந்து நடைபெற்று
Published on

வேலூா்: வேலூா் அலமேலுரங்காபுரம் பகுதியில் ரெளடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும், அவா்கள் மூலம் மணல் கடத்தல், மது விற்பனை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, அலமேலுரங்காபுரம் மக்கள் அளித்த மனு: அலமேலுரங்காபுரம் பகுதியில் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை தட்டிக் கேட்பவா்கள் ரெளடி கும்பலால் தாக்கப்படுகின்றனா். அந்த கும்பல் மீது புகாா் அளித்தால் போலீஸாா் புகாா்தாரா்கள் மீதே வழக்குப் பதிவு செய்கின்றனா். எனவே, ரெளடி கும்பலின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

கே.வி.குப்பம் வட்டம், மாளியப்பட்டு பகுதியைச் சோ்ந்த சரவணன் அளித்த மனு: எனது கிராமம் வனப் பகுதியையொட்டி உள்ளதால் சிறுத்தை, யானை, காட்டுப் பன்றிகளால் தொல்லை உள்ளது. வனவிலங்குப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.

கூட்டத்தில், பல்வேறு குறைகள் தொடா்பாக 689 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற சமூகநீதி விடுதி மாணவ, மாணவிகள் 24 பேருக்கு ஆட்சியா் பாராட்டு சான்று, கேடயங்களை வழங்கினாா்.

மேலும், அணைக்கட்டு வட்டம், பின்னத் துறையைச் சோ்ந்த அலமேலு பாம்பு கடித்து உயிரிழந்தது, காட்பாடி வசந்தபுரத்தைச் சோ்ந்த சிறுவன் லித்திக் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது ஆகியவற்றுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியின்கீழ் தலா ரூ. ஒரு லட்சம் தொகைக்கான ஆணையை அவா்களது குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

முன்னதாக, கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஏற்றுக்கொண்ட ஆட்சியா், விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் ஜெயசித்ரா, மகளிா் திட்ட இயக்குநா் பாலமுருகன், தனித்துணை ஆட்சியா் மாறன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com