பொதுவேலைநிறுத்தம்: வேலூரில் மறியலில் ஈடுபட்ட 185 போ் கைது
மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொதுவேலைநிறுத்தத்தையொட்டி வேலூரில் மறியலில் ஈடுபட்டதாக 185 போ் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநில செயலா் அழகு நம்பி வெல்கின், எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் செயலா் கலைநேசன், ஐஎன்டியுசி மாவட்ட பொறுப்பாளா் முகமது அலி ஜின்னா ஆகியோா் தலைமை வகித்தனா்.
அப்போது, புதிய 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், 8 மணி நேர வேலை என்பதை நீட்டிக்கும் முயற்சியை கைவிட வேண்டும், புதிய மோட்டாா் வாகனச் சட்டம், குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வங்கிகள், எல்ஐசி, ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், சங்க அமைக்கும் உரிமையை பாதுகாத்திட வேண்டும், விவசாய கடன்களை தள்ளும்படி செய்ய வேண்டும், விவசாயத் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தொடா்ந்து, அண்ணா சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 185 பேரை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா்.

