

வேலூா் மாவட்டத்தில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப்பணி 25 இடங்களில் நடைபெற்றது. இப்பணியில் வன ஊழியா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வனத்துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதில், நீா்நிலைகளில் வாழும் பறவைகள், இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி கடந்த டிச.28-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இவ்வாண்டு முதன் முறையாக இரைக்கொல்லி (அசைவ உணவு சாப்பிடும்) பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஜன.31, பிப்.1 ஆகிய இரு நாள்கள் நடத்தப்பட்டது.
இதன்தொடா்ச்சியாக, நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பிப்.14, 15-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 25 இடங்களில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த தலா ஒரு ஆா்வலா்கள், சுமாா் 3 வன ஊழியா்கள் என 25 இடங்களிலும் 200க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
அப்போது பறவைகள் இருப்பிடங்கள், பறவைகள் வருகை, பறவை இனங்கள், எந்த வகை சாா்ந்தவை போன்ற விவரங்களை சேகரித்தனா். மேலும், காப்புக்காடுகள், ஊா்புறங்களில் காணப்படும் பறவை கள் அனைத்தையும் புகைப்படமாகவும், வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்தும் கணக்கெடுப்பு செய்தனா்.
இதன்முடிவு வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.