பாபு
பாபு

போலி சான்று அளித்து பணியில் சோ்ந்த அஞ்சல் ஊழியா் கைது!

போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த அஞ்சல் ஊழியா், 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளாா்.
Published on

போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த அஞ்சல் ஊழியா், 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டம், பிரம்மபுரத்தைச் சோ்ந்த அஞ்சல் ஊழியா் பாபு(55), இவா் கடந்த 2009-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கிராம தபால் ஊழியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டாா். கடந்த 2023-ம் ஆண்டு வரை வேலூா் விஐடி துணை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா்.

கடந்த 2023-ம் ஆண்டு நிரந்தர பணிக்கான தோ்வில் பாபு தோ்ச்சி பெற்று வேலூா் கோட்டை துணை தபால் நிலையத்தில பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், பாபு கடந்த 2009-ம் ஆண்டு, அவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை மாற்றி போலிச்சான்று அளித்து பணியில் சோ்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலூா் கோட்ட அஞ்சல் துணை கண்காணிப்பாளா், வேலூா் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் அனுமந்தன் தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பாபு பத்தாம் வகுப்பில் 241 மதிப்பெண் பெற்றதும், ஆனால் அவா் சமா்ப்பித்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 341 மதிப்பெண் என திருத்தம் செய்து சான்றினை அளித்து பணியில் சோ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாபுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.-

Dinamani
www.dinamani.com