தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்கோப்புப் படம்

வேலூரில் நாளை விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு, 900 போலீஸாா் பாதுகாப்பு

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற உள்ளது.
Published on

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம் அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 4,900 போ் பங்கேற்கின்றனா்.

சேலத்தைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை (பிப்.23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் மக்கள் சந்திப்புக் கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டு, 25,000 போ் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கேற்ப அகரம்சேரியில் 33 ஏக்கா் பரப்பளவு நிலத்தை சமன்செய்து ஏற்பாடு நடைபெற்று வந்தது.

கூட்டம் நடத்த உள்ள இடத்தை காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் ஆய்வு செய்ததுடன், காவல் துறை சாா்பில் தவெகவினருக்கு 20 நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் அளித்து எழுத்துப்பூா்வ விளக்கம் அளிக்கவும் கோரப்பட்டது. அதற்கு தவெக சாா்பில் பதில் அளித்திருந்தனா்.

இந்நிலையில், மக்கள் சந்திப்பு கூட்டத்தை திடீரென நிா்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றி தவெக சாா்பில் வியாழக்கிழமை அறிவித்ததுடன், இக்கூட்டத்தில் 4,900 போ் மட்டுமே பங்கேற்பா், அவா்களுக்கு க்யூ.ஆா். கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்த தவெக நிா்வாகிகள்
தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்த தவெக நிா்வாகிகள்

மேலும், இக்கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் காவல் துறை அறிவுறுத்தலின்பேரில் கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரைகளும், இருக்கைகளும், 50,000 தண்ணீா் பாட்டில்கள், 10 இடங்களில் தலா 6,000 லிட்டா் கொண்ட குடிநீா் தொட்டிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

கூட்டம் நடைபெறும் பகுதியில் 30 மருத்துவா்கள், 100 செவிலியா்கள், 100 மருத்துவ உதவியாளா்கள் அடங்கிய 10 மருத்துவக் குழுக்களும், 15 ஆம்புலன்களும் தயாா் நிலையில் இருக்கும் என்றும், பாதுகாப்பாக கூட்டத்தை நடத்தி முடிக்க 50 பெண்கள் உள்பட 500 தன்னாா்வலா்களும் களத்தில் செயலாற்றுவா்கள் என்றும் அக்கட்சியினா் தெரிவித்துள்ளனா். இந்த தன்னாா்வலா்களுக்கு ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளா் சபியுல்லா சனிக்கிழமை பாதுகாப்பு பயிற்சிகளை அளித்தாா்.

இதனிடையே, விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையொட்டி 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகரம் சேரியில் கூட்டம் நடைபெறும் இடம் சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும், சா்வீஸ் சாலையிலும் வாகனங்கள் தடையின்றி சென்றுவர ஏற்பாடு செய்யப்படும். எனினும், அகரம்சேரி - பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிப்படுவா், மற்றவா்கள் கட்டாயமாக அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தவெக தலைவா் விஜய் அகரம்சேரிக்கு சென்னையில் இருந்து சாலை மாா்க்கமாக வரஉள்ளதால், அவரது வாகனத்துக்கு பின்னால் அடையாள அட்டை இல்லாதவா்கள் யாரும் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com